Thursday, May 20, 2010

தேர்தலுக்கு தயாராகும் ஜெயலலிதா!




‘‘இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது/தெரிவிப்பது என்னவென்றால், டிசம்பர் ஃபீவர் ஸ்டார்ட் ஆயிடுச்சு. எல்லோருக்கும் வேலைப் பளு அதிகரிக்கும். அதுக்கு தயாரா இருங்க...’’ என்று கிராமங்களில் தண்டோரா போட்டு செய்தியை தெரிவிக்கும் நபர் போல, சட்டமன்ற தேர்தல் டிசம்பரில் கட்டாயம் வருது என்ற தகவலைச் சொன்னார் மதியார்.

‘‘சரி, அதனை நேரடியாகச் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே? எதற்கு இந்த தண்டோரோ அறிவிப்பெல்லாம்?’’ என்றோம் நாம்.

‘‘தண்டோரோவோ, முரசோ... எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இப்பவே டிசம்பர் ஃபீவர் ஆரம்பமாயிடுச்சு தெரியுமாக்கும்? சிறுதாவூர் பங்களாவில் வைத்து மூன்று மாத காலத்துக்கு கட்சியின் அனைத்து மாவட்ட ஆட்களையும் வரிசையாக வரச் சொல்லி, பார்த்து, பேசி, உற்சாகப்படுத்தி அனுப்பினால் அவர்கள் நேரடியாக களத்துக்குச் சென்று தேர்தல் வேலைப் பார்ப்பார்கள் என்று பக்காவாக பிளான் போட்டு, அதற்காக சிறுதாவூர் பங்களாவில் சிறப்பான ஏற்பாடுகளையெல்லாம் ஜெயலலிதா செய்து கொண்டிருந்தாரில்லையா?’’ நிறுத்தினார் மதியார்.

‘‘அதில் ஏதும் மாற்றம் இருக்கிறதா என்ன?’’

‘‘நன்றாகக் கேட்டீர். மாற்றம் தானே செய்தியே! சிறுதாவூர் பங்களாவை நேர்காணலுக்காக ஜெயலலிதா தயார்படுத்திக் கொண்டிருக்க, ஆளும்கட்சித் தரப்பில் தங்களை டிசம்பர் தேர்தலுக்குத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் பார்த்து நேர்காணல், அது... இது... என்று ஜெயலலிதா மட்டும் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்க முடியுமா என்ன? அதனால், நேர்காணல் திட்டத்தை கைவிடும் யோசனைக்கு வந்துவிட்டாராம். நேர்காணலெல்லாம் தேர்தலுக்குப் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம். இருந்தாலும், பத்து நாளைக்கு மட்டும் வரிசையாக எல்லா மாவட்டத்துக் கட்சிக்காரர்களையும் வரவழைத்து, சிம்பிளாக நேர்காணலை நடத்தி முடித்துவிடப் போகிறாராம்...’’

‘‘ஓ... கடைசில இப்படி ஆகிப் போயிடுச்சா?’’
‘‘சரி, ஜெயலலிதா நேர்காணல் நடத்தவிருந்தது இப்படி மாறிப்போகப் போகுதுன்னா, வர்ற 22&ம் தேதியன்னைக்கு அவசரமா சென்னையில 234 தொகுதிகளுக்கும் கட்சி சார்பா போடப்பட்டிருக்கும் பொறுப்பாளர்களையும் வரவழைச்சு மீட்டங் நடத்தப் போறாரு விஜயகாந்த் அது தெரியுமா?’’ என்றார்.

‘‘சொன்னால் தெரிந்து கொள்வேனாக்கும்...’’




‘‘சொல்கிறேன். விஜயகாந்தும் தேர்தலுக்குத் தயாராக வேண்டாமா? அதற்கான முன்னேற்பாடாகத்தான் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம். தொகுதி பற்றிய அத்தனை புள்ளிவிவரங்களோடும் சென்னைக்கு வண்டி ஏற வேண்டும் என்று தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு கட்சியின் தலைமையிலிருந்து உத்தரவிட்டிருக்கிறார்களாம். எந்தத் தொகுதி பொறுப்பாளரையும் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி, எந்தக் கேள்வியும் கேட்பாராம் விஜயகாந்த். தெளிவாகச் சொல்ல வேண்டுமாம்... இல்லையென்றால்?’’
‘‘இல்லையென்றால்... என்ன ஆகும்?’’

‘‘டென்ஷனாகும். என்ன வேண்டுமானாலும் நடக்குமாம். மொத்தத்தில் பள்ளிக்கூட வாத்தியார் மாதிரி விஜயகாந்தும் பள்ளி மாணவர்களாக பொறுப்பாளர்களாகவும் இருக்க, கூட்டம் நடத்தப்படும் போல. விஜயகாந்த் வைக்கும் தொகுதிப் பரீட்சையில் எத்தனை பொறுப்பாளர்கள் தேறுவார்கள்? எத்தனை பொறுப்பாளர்கள் ஃபெயில் ஆவார்கள் என்றுதான் தெரியவில்லை. ஆனால், வீடு திரும்புவதற்குள் அ.தி.மு.க. பாணியில் சில பொறுப்பாளர்கள் பதவி பறிக்கப்பட்டாலும் படலாமாம். அந்தளவுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் சீரியஸாக இருக்கப் போவதாகத்தான் கட்சிக்காரர்களிடம் சொல்லியிருக்கிறாராம் விஜயகாந்த். ‘கேப்டன் ரொம்ப சீரியஸா இருக்காங்க. அதுனால, தொகுதி பத்தில் ஒண்ணுவிடாம விவரங்க¬ளைத் திரட்டி வந்துடுங்க’னு தலைமையிலிருந்து சொன்னத் தகவலை வெச்சு, பயந்தபடியே அங்கும் இங்கும் ஓடி விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்களாம், கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர்கள்...’’

‘‘பொறுப்புக்குன்னு வந்துட்டா எத்தனை சிரமம் பாரும்..?’’

‘‘இதுக்குத்தானே இத்தனை அடிதடியா கெடக்குது? காசு பணமெல்லாம் கொடுத்துக்கூட பதவி வேணும்னு அலையறாங்களே? என்ன செய்ய..? பதவி பொறுப்புன்னு வந்தபிறகு இதெல்லாம் அனுபவிச்சுத்தான் ஆகணும். புரிஞ்சுதா’’ என்ற மதியார், ‘‘காலாவதி மருந்து, போலி மருந்துன்னெல்லாம் பெரிய விவகாரம் ஒண்ணு பூதாகரமா கிளம்பி மீனாட்சி சுந்தரம், சஞ்சீவ் சர்மான்னு பலபேரை வளைச்சு வளைச்சு பிடிச்சாங்க போலீஸ் அதிகாரிங்க. சென்னை ராயபுரம் ஏரியாவில் இந்த காலாவதி மருந்துப் பொருட்களை வைத்துக் கொள்வதற்காக குடோனை வாடகைக்கு விட்டவர்களையெல்லாம்கூட விடாமல் விரட்டி விரட்டிப் பிடித்தது சி.பி.சி.ஐ.டி., போலீஸ். ஆனால், இந்த விவகாரத்தின் ஆழ&அகலம் ரொம்பப் பெரிதாகச் சென்று கொண்டிருக்கிறதாம். என்ன காரணமோ தெரியலையாம்... இந்த வழக்கில் ரொம்ப வேகமாகச் சென்ற சி.பி.சி.ஐ.டி., போலீஸார் திடீரென்று பிரேக் அடித்து, நின்று விட்டார்களாம். இருக்கும் தகவல்களை மட்டும் வைத்து வழக்கை நடத்தி, சிக்கியவர்களுக்கு மட்டும் தண்டனை வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்து விட்டார்களாம்...’’

‘‘என்னது, வழக்கு விசாரணையை தொடராமல் விட்டு விட்டார்களா? தீர விசாரித்தீரா?’’
‘‘எதையும் விசாரிக்காமலா சொல்வேன். சமீபகாலமாக சி.பி.சி.ஐ.டி., போலீஸார் மீது சொல்லப்படும், புகார்தான் இந்த விஷயத்திலும் சொல்லப்படுகிறதாம். காலாவதிகளும் போலிகளுமாகச் சேர்ந்து சி.பி.சி.ஐ.டி., போலீஸ் படைக்குள்ளேயே இருக்கும் போலிகளையும் காலாவதிகளையும் தேர்ந்தெடுத்து, படம் காட்ட பெட்டிப் பாம்பாக அவர்கள் அடங்கிப் போய்விட்டார்களாம். அவர்கள் தந்திரமாக உயர் அதிகாரிகளை திசைத்திருப்பி, ‘அவ்வளவுதான் சார் இந்த விவகாரம். தொடர்ந்து என்ன விசாரிச்சாலும், இதே தகவல்கள்தான் கிடைக்கும்...’ என்று தந்திரமாகச் சொல்ல, எந்திரமாகத் தலையாட்டி விட்டார்களாம் அதிகாரிகள்...’’

‘‘அடப்பாவமே! மனித உயிரோடு விளையாடும் மருந்துப் பொருட்களில் நடக்கும் முறைகேடுகளில்கூடவா இப்படியெல்லாம், உள்விளையாட்டு விளையாடுகிறார்கள்?’’
‘‘உம்ம கவலை உமக்கு. அவர்கள் கவலை அவர்களுக்கு! மனித உயிரெல்லாம் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், இந்தத் தவறுகளுக்கே வழியில்லையே... ஆகமாட்டாத விஷயத்தையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீரே...’’ என்று நம் கமென்ட்டுக்கு எரிச்சல் கமென்ட் போட்ட மதியார், விவகாரத்தை விவரமாக அடுக்க ஆரம்பித்தார்.

‘‘சஞ்சீவ் குமார், மீனாட்சி சுந்தரத்தையெல்லாம் பிடித்து விளக்கமாக விசாரித்தபோது அவர்கள் தங்களுக்கும் ஆந்திராவில் இருக்கும் ஒரு மருந்து கம்பெனி கும்பலுக்கும் உள்ளத் தொடர்புகளையெல்லாம் சொன்னார்களாம். அதனடிப்படையில்தான் சி.பி.சி.ஐ.டி., போலீஸார் ஆந்திராவின் ஹைதராபாத்துக்குச் சென்று தீவிரமாக விசாரித்தார்களாம். ஹைதராபாத்துக்கு அருகில் ஜீடிமெட்லா என்ற ஏரியாவில் போலியாக மருந்து தயாரிக்கும் கம்பெனி ஒன்றையே நடத்தி வந்தார்களாம். தயாரிக்கப்படும் மருந்துகள் குறிப்பிட்ட காம்பினேஷனில்தான் தயாரிக்கப்படுகிறது என்று சான்றளிப்பதற்காக போலியாக மருந்து சோதனைக் கூடம் ஒன்றைக்கூட ஏற்பாடு செய்து வைத்திருந்ததெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டதாம். இங்கிருந்து போலியாக தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்களெல்லாம் இந்தியா முழுவதும் விற்பனைக்குச் சென்றிருக்கிறதாம். அப்படி இங்கிருந்து அனுப்பப்பட்ட எல்லா மருந்துப் பொருட்களும் சென்னை வந்து அங்கிருந்துதான் அனுப்பப்பட்டிருக்கிறதாம். இதெல்லாத்தையும் கண்டுபிடித்துவிட்ட சி.பி.சி.ஐ.டி., போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தார்களாம். சிலரை வளைக்க முயல, கடந்த 15&ம் தேதியன்று இந்த சோதனைக் கூடம் திடுமென தீப்பிடித்து எரிந்து விட்டதாம்.

அங்கு பணியில் இருந்த 7 பேர் காயம்கூட அடைந்திருக்கிறார்கள். தீப்பிடித்து எரிந்த சம்பவம், ஒரு விபத்து போல காட்டப்பட்டாலும், அதனுள்ளே பல விவகாரம் ஒளிந்திருக்கிறது என்பதுதான், நடப்பதையெல்லாம் கூர்ந்து நோக்கும் நேர்மையான சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகளின் புலம்பலான பேச்சு! இருந்தாலும், ஆந்திராவில் இருந்து நரசிம்மராவ், வெங்கட்ரெட்டி என்ற இருவரை போலீஸார் கைது செய்து போலி மருந்து தொழிற்சாலை நடத்தியது தொடர்பாக கைது செய்திருக்கிறார்களாம். இருந்தும் பூபதி ராஜூ, சுப்புராஜூ ஆகிய இருவரும்தான் இத்தனை பூதாகர நிகழ்வுகளுக்கும் பூதங்களாக இருந்து செயல்பட்டவர்களாம். அவர்களை வளைக்காமல் சி.பி.சி.ஐ.டி., பம்முவதன் பின்னணி குறித்துத்தான் பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்கிறதாம்...’’

‘‘இருக்காதா பின்னே?’’
‘‘பெரிய நெட்வொர்க் பின்னணியாக இருந்து செயல்பட்டுள்ள குற்றங்கள் இது. மாநிலங்களைக் கடந்தும் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்த வழக்கை இந்த நிலையிலாவது சி.பி.ஐ., போலீஸாரிடம் கொடுத்துவிடலாம் என்பதுதான் சி.பி.சி.ஐ.டி., போலீஸிலேயே இருக்கும் ஒரு சில அதிகாரிகளின் கருத்து!’’

‘‘அந்த கருத்தெல்லாம் ஏழைச் சொல்லாக இருந்தால் அம்பலத்துக்கு வராதுதானே?’’

‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது... இப்போதைக்கு என்னுடைய இலக்கு அடுத்தச் செய்தியைச் சொல்வதுதான்...’’ என்ற மதியார், ‘‘சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக இருக்கும் பலருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பாக டிரான்ஸ்பர் போட்டார்களில்லையா, அதில் ரொம்பவும் வருத்தத்தில் இருப்பவர் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராகவும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் இணக்கமான அதிகாரியாகவும் இருக்கும் அசோக் வரதன் ஷெட்டிதானாம். போடப்பட்டிருக்கும் டிரான்ஸ்பரில் ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குநராக இருந்த ககன் சிங் பேடிக்கும் மகளிர் மேம்பாட்டுத் துறையின் நிர்வாக இயக்குநராகவும் உதயச்சந்திரன் ஆகிய இருவருக்கும்கூட மாறுதல் போடப்பட்டிருக்கிறது.

இந்த இருவருமே அசோக் வரதன் ஷெட்டிக்கு கீழே பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள்தானாம். மாறுதல் வரும் வரையில் ஷெட்டிக்கு இந்த விவரம் எதுவுமே தெரியாதாம். அதனால், தலைமைச் செயலாளராக இருக்கும் ஸ்ரீபதி மீதுதான் கடுமையான அதிருப்தியில்
இருக்கிறாராம் ஷெட்டி...’’
‘‘அதிருப்தியோடு இருந்து மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? போட்ட டிரான்ஸ்பரை திரும்பப் பெற்றுக் கொண்டுவிடப் போகிறார்களாக்கும்?’’

‘‘அடக்கம் ப்ளீஸ்...’’ என்ற மதியார், ‘‘அதென்னவோ தெரியவில்லை... கரூர் தொகுதியின் முன்னாள் எம்.பி&யான தி.மு.க. பிரமுகர் கே.சி. பழனிச்சாமியை உண்டு, இல்லை என்று ஆக்கிவிட முடிவெடுத்து விட்டாராம் ஜெயலலிதா. ஏற்கெனவே கொள்ளை கொள்ளையாக தி.மு.க&வினர் ஆற்று மணலைத் திருடி சம்பாதிக்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லி, அ.தி.மு.க. சார்பில் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தி விட்டார் ஜெயலலிதா. அதன்பிறகும், அவர் அதனை விடுவதாக இல்லையாம். புதிதாகக் கிடைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமானதாக இருப்பதாகச் சொல்லி, இன்னொரு போராட்டத்தை அறிவிக்கப் போகிறாராம். அந்தப் போராட்டம் முழுக்க முழுக்க கே.சி.பழனிச்சாமியை மையப்படுத்தியே இருக்கப் போகிறதாம். விசாரித்தால், நமக்கேக் கூட கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.’’

‘‘அப்படியென்ன அதிர்ச்சி...’’

‘‘அ.தி.மு.க&வினர் சொன்னத் தகவல்களை மட்டும் விவரமாகச் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளும்... மதுக்கான் ப்ராஜெக்ட் லிமிடெட் என்ற ஒரு நிறுவனம் கிராவல் மண் எடுக்க டென்டர் எடுத்திருந்ததாம். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட இடத்தைத் தாண்டியும் மண் எடுத்து பணம் பார்ப்பதாக கனிம வளத் துறையினருக்குத் தொடர்ந்து வந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த 01.07.2009 அன்று ரெய்டு நடத்தினார்களாம். அப்போது 1062 லோடு கிராவல் மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டிருப்பது தெரிந்து, இரண்டு லட்ச ரூபாய் தண்டத் தீர்வை விதித்தார்களாம் அதிகாரிகள். அதோடு, அந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலிலும் வைத்தார்களாம். இத்தனை பின்புலங்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக இருந்தும் அதனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், அந்த நிறுவனத்துக்கு மீண்டும் கிராவல் மண் அள்ளுவதற்கு அரசு தரப்பிலிருந்து 19.02.2010 தேதியிட்டு அனுமதி கொடுத்திருக்கிறார்களாம். காரணம், கே.சி.பழனிச்சாமி என்பதுதான் அ.தி.மு.க. தரப்பின் குற்றச்சாட்டு. இப்படி பல கம்பெனிகளை போலியாக உருவாக்கி வைத்துக் கொண்டு கோடி கோடியாக மணல் அள்ளிக் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லத்தான் போராட்டம் நடத்தப் போகிறாராம் ஜெயலலிதா!’’

‘‘ஓ... இதற்குப் பின்னால் இத்தனை விவரங்கள் இருக்கிறதாக்கும்?’’

‘‘இன்னும் இன்னும் இருக்காம். அதெல்லாம் போராட்டத்தின் போது வரிசையாக வெளிவருமாம்...’’ என்ற மதியார், ‘‘தமிழக அரசு மின்வெட்டைத் தடுக்க ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறதா? என்று நேற்று ஒரு சிக்கலான கேள்வியைப் போட்டீரல்லவா? அது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தேன். பெரிய அளவில் திட்டம் எதுவும் இல்லை என்பதுதான் அவர்களுடைய பதில். இது அரசு தரப்புக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரியுமாம். அதனால்தான், இந்தப் பிரச்னை அடுத்த மே மாதம் கோடையில் பூதாகரமாக வெடித்து, அரசுக்கு எதிரான பெரிய பிரச்னையாகத் திரும்பி, அது தேர்தலில் எதிரொலித்துவிடக் கூடாது என்பதில் தி.மு.க. தரப்பு கவனமாக சில ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறதாம்...’’
‘‘என்ன ஏற்பாடு, கர்நாடகத்திலிருந்து கரண்ட் வாங்கப் போகிறார்களா?’’

‘‘அப்படியெல்லாம் இல்லையாம். மக்கள் மழை&குளிர் காலத்தில் கரண்ட் கட் பிரச்னையில்லாமல் மறந்திருக்கும் சமயமான டிசம்பர் மாதத்திலேயே தேர்தலை நடத்தி முடித்துவிடலாம் என்பதுதான் திட்டமாம். பிறகு, ஆட்சிக்கு வந்த பின்னால், மக்கள் மே மாதத்தில் திண்டாடி, திட்டித் தீர்த்து ஆகப் போவதென்ன? ஸ்டேடஸ்கோ மெயின்டென் ஆகப் போகிறது அவ்வளவுதானே?’’ என்ற மதியார், ‘‘கரண்ட் கட் வரையில் செய்தி சொல்லியாச்சு. இத்தோடு இன்றைய நியுஸுக்கு கட்!’’ என்று சொல்லிவிட்டு மின்சாரமாய் மறைந்தார்.


Wednesday, May 19, 2010

முதல்வர் வீட்டில் ஜோதிடர்கள்?




‘‘ஐயையோ... சிரச சனியா? ஆபத்துன்னுல சொல்லுவாங்க. இரண்டாவது ஏழரைன்னாலே கொஞ்சம் படுத்தித்தானே வைக்கும். பொறுமையா மட்டும் இரண்டரை வருஷத்தைத் தள்ளச் சொல்லிடுங்க. அதுக்குப் பின்னால, சனியே ரொம்ப நல்லது செஞ்சிட்டுப் போகும்...’’ என்று ஜோதிடராக மாறி யாருக்கோ செல்போன் மூலம் தகவல் சொல்லிக் கொண்டே அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார் மதியார்.

சகல விஷயங்களிலும் மதியார் நுட்பமான அறிவோடு இருப்பதை நினைத்து பெருமையாக அவரை ஏறிட்டோம்.

‘‘ஒண்ணுமில்லை. என்னோட நண்பர் ஒருத்தர் ரொம்ப நல்ல மனுஷன். ஆபீஸுலயே அவர்தான் டாப்பான ஆசாமியா இருந்தார். ஏழரை சனி. மனுஷனை போட்டு ஆட்டுது. பக்கத்து ஸீட்டுலயே உட்கார்ந்துகிட்டு இருக்கறவங்கலெல்லாம் மாலை நேரத்து ஹோட்டல் திருவிழாவுக்கு ஓனரை அழைச்சுகிட்டுப் போய், அவருகிட்ட நம்ம நண்பரைப் பத்தில் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால், பீரடித்துப் போன ஸாரி, கிர்ர்ரடித்துப் போன ஓனர், திடுமென அவரை பதவி இறக்கம் பண்ணி தன்னோட அதிகாரத்தைக் காட்டிட்டாராம். இதத்தான் அவரு வீட்டுலயிருந்து சொல்லிகிட்டு இருந்தாங்க. அதுக்குத்தான் ஆறுதலா, ஏழரை சனி கொடூரம் பத்தி எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். சரிதானே?’’ என்று அப்பாவியாகக் கேட்டார் மதியார்.

‘‘நீர் எது செய்தாலும் சரிதான்...’’ என்று நாம் சொல்ல, மதியார் அரசியல் ரீதியில் நடக்கும் ஜோதிடர் மோதல் குறித்தத் தகவலுக்குள் புகுந்தார்.


‘‘ ‘புதிய சட்டமன்ற வளாகக் கட்டடம் ஜோதிடர்கள் அறிவுரைபடி கட்டப்பட்டிருக்கிறது. இப்படியொரு மோசமான கட்டடத்தை நான் பார்த்ததே இல்லை’ என்கிற ரீதியில் சமீபத்தில், புதிய சட்டமன்ற வளாக கட்டடம் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜெயலலிதா. அதில் தமிழக முதல்வர் கருணாநிதியின் ஜோதிட நம்பிக்கைக் குறித்தும் நிறையவே வாரியிருந்தார். இதனைத் தொடர்ந்து கண்ணகி சிலை அப்புறப்படுத்தப்பட்டதில் ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை மேற்கோள்காட்டி ஜெயலலிதாவின் ஜோதிட நம்பிக்கைகள் குறித்தெல்லாம் பதில் வாரல் செய்திருந்தார் கருணாநிதி. அதில், எனக்கு சிறுவயது முதற்கொண்டே இந்த ஜோதிடத்தின் மீதெல்லாம் துளியும் நம்பிக்கையில்லை என்றெல்லாம் சொல்லியிருந்தார் முதல்வர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தரப்பு தீவிரமாக களமிறங்கி ஒரு விஷயத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறது.’’ என்றார் மதியார்.

‘‘என்ன செய்யப் போகிறார்களாம்?’’




‘‘ஒன்றுமில்லை. கருணாநிதி தனக்கு ஜோதிட நம்பிக்கையில்லை என்று தெரிவித்ததை பொய்யாக்கும் விதமாக ஆதாரம் எதுவும் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்களாம். முதல்வர் இல்லத்துக்கும் அவருடைய துணைவியார் ராசாத்தியம்மாள் வீட்டுக்கும் வந்து செல்லும் ஜோதிடர்கள் யார் யார் என்கிற கண்டுபிடிப்புப் பணியில்தான் தீவிரமாக இறங்கி இருக்கிறார்களாம் அ.தி.மு.க&வினர். விசாரணையில் எந்தந்த ஜோதிடர்களெல்லாம் முதல்வர் இல்லத்துக்குச் சென்று வருகிறார்கள் என்றெல்லாம் தகவல் கிடைத்திருக்கிறதோ, அந்த ஜோதிடர்களையெல்லாம் அ.தி.மு.க. நபர்கள் பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்களாம். அவைகளெல்லாம் ரகசிய கேமராக்கள் மூலம் பதிவெடுக்கப்படுகிறதாம்.’’

‘‘ஐயையோ, அதை வெச்சு என்ன செய்யப் போறாங்களாம்?’’

‘‘என்ன செய்வாங்க? இதுகூட புரியலையா உமக்கு? ஜோதிட விஷயத்தில் முதல்வர் சொன்னதை பொய்னு ஆதாரத்தோடு நிரூபிப்பதற்காகத்தான் இந்த முயற்சியாம். முதல்வர் இல்லங்களில் நடைபெறுவதாகச் சொல்லப்படும் மறாமத்துப் பணிகளெல்லாம்கூட ஜோதிடர் அறிவுரையின்படியே நடைபெறுவதாக அ.தி.மு.க. தரப்புக்குத் தகவல் கிடைத்திருக்கிறதாம்.

அதேபோல, முதல்வரின் துணைவியார் ராசாத்தியம்மாளுக்குச் சொந்தமான ராயல் பர்னிச்சருக்கு வருகை தரும் ஜோதிடர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டிருக்கிறதாம். அங்கும்கூட சர்வலைன்ஸுக்கு ஆட்கள் போடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பத்திரிகைகளில் தற்போது வார ராசிபலம் எழுதுவதில் முன்னணியில் இருக்கும் ஒரு ஜோதிடர்தான் தற்போது ராசாத்தியம்மாளுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருக்கிறார் என்கிற தகவல் கிடைக்க, அந்த ஜோதிடரை பின் தொடர ஆரம்பித்திருக்கிறதாம், அ.தி.மு.க. தரப்பு...’’
‘‘அடேங்கப்பா, ஜோதிட விஷயத்திலேயே இத்தனை இருக்கிறதா?’’

‘‘பின்னே, இதெல்லாம் இருப்பதால்தானே அரசியல் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதுமட்டுமா? முதல்வர் இல்லத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஜோதிடர் பெரும் தொகை ஒன்றை களவாடிச் சென்று விட்டதாகவும், அதனை வெளியே தெரியாமல் போலீஸில் புகார் கொடுத்து திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டதாகவும் அ.தி.மு.க. தரப்புக்குத் தகவல் கிடைக்க, அது தொடர்பான ஆவணங்கள் எதுவும் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறதாம் அ.தி.மு.க. தரப்பு. அ.தி.மு.க. தரப்பு, முதல்வர் இல்லங்களில் ஜோதிட நடமாட்டம் குறித்து விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது என்றவுடன், சும்மா நாம் கே வாஸாக சிலர் தகவல்களை அடித்துவிடவும் செய்கிறார்களாம். இதில் எத்தனை உண்மை? எத்தனை பொய் என்று தெரியாமல், நிறைய விவரங்களை வைத்துக் கொண்டு அ.தி.மு.க. தரப்பினர் தடுமாறி வருவதாகவும் தகவல்...’’

‘‘மொத்தத்தில் எல்லாமே இன்ட்ரஸ்டிங்!’’

‘‘அரசியல்&வியாபார பவர் புரோக்கராக இருந்து செயல்பட்ட நீரா ராடியா என்கிற பெண்மணியின் புரோக்கர் பணிகளெல்லாம் அவருடைய டெலிபோன் பேச்சுப் பதிவிலிருந்து வெளியாக அரசியல்+பிஸினஸ் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியது.



இருந்தாலும், நீரா ராடியா அது குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லையாம். தன்னுடன் பயமில்லாமல் தொடர்பில் இருப்பவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறாராம். பவர் புரோக்கர் வேலை அநாயசமாகத் தொடருகிறதாம். ஆனால், மத்தியில் இருக்கும் ஒரு சில அமைச்சர்கள் மட்டும், ‘நீரா ராடியா ஹியர்’ என்றாலே, நெருப்பை மிதித்தது போல உணருகிறார்களாம். சட்டென சுதாரித்து, ‘மேடம், ஐ வில் கால் யு பேக்!’ என்று சொல்லி, செல்போனை துண்டித்துவிடுகிறார்களாம். இப்படி செல்போனை துண்டிப்பதில் தமிழகத்து அமைச்சர்கள் சிலர் முக்கியமானவர்களாக இருக்கிறார்களாம். நீரா ராடியாவால் வேறு எதுவும் பிரச்னை கிளம்பி விடக் கூடாது என்பதில் ரொம்பவே சுதாரிப்பாக இருக்கிறார்களாம், நம்ம ஊரு ஆட்கள்...’’

‘‘பயமோ, எச்சரிக்கையோ... இருக்கட்டும், இருக்கட்டும்!’’

‘‘உள்துறை அமைச்சர் பொறுப்பு ரொம்பவே சிக்கலாக இருப்பதாக உணருகிறாராம், ப.சிதம்பரம். சிலர் தன்னை திட்டமிட்டுப் பழி வாங்கி விட்டதாக நினைக்கிறாராம். ‘நிதியமைச்சர் பொறுப்பு என்றாலும், கொஞ்சம் கடுமையான பணிச்சுமை கொண்டதுதான். இருந்தாலும், அதில் இத்தனை சிக்கல்கள் கிடையாது...’ என்று சொல்லும் ப.சிதம்பரம், சமீபத்தில் சட்டீஸ்கரில் தீவிரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 50&க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் அப்பாவி பொதுமக்களும் அடங்குவர். இது மத்திய அரசுக்கு விடப்பட்ட சவால் என்பதை விட, தீவிரவாதிகள் விஷயத்தில் கெடுபிடியோடு நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்ளும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான நடவடிக்கை என்பதாகத்தான் தீவிரவாதிகள் வட்டாரங்களில் இருந்து பரவும் செய்தியாம். இதுகூட ப.சிதம்பரத்தை ரொம்பவும் அப்செட்டாக்கி இருக்கிறதாம். ‘ஏற்கெனவே உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல், தீவிரவாதிகளை ஒடுக்குவதில் நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் விளைவுதான், இத்தனை தூரத்துக்கு விசுவரூபமெடுத்து நிற்கிறது...’ என்று பழியை சிவராஜ் பட்டீல் மீது சுமத்தினாலும், இன்றைக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பது ப.சிதம்பரம்தான்.’’
‘‘இத்தனை கஷ்டமான அந்தத் துறையை ஏன் சுமக்க வேண்டும்?’’
‘‘இதனை ப.சிதம்பரம் மட்டும் நினைக்காமல் இருப்பாரா என்ன? அவரும் பிரதமரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் தன்னை இந்தத் துறையில் இருந்து விடுவிக்குமாறுதான் கோரிக்கை வைக்கிறாராம். ஆனால், பிரதமர்தான் விடமாட்டேங்கிறாராம். ‘நானோ, சோனியா காந்தியோ உங்கள் செயல்பாடுகளிலோ நடவடிக்கைகளிலோ திருப்தியில்லாமல் இருந்தால்தான் நீங்கள் வருத்தப்பட வேண்டும். கஷ்டமான பணியை சுமப்பதற்கு உங்களைப் போன்ற சிலரால்தான் முடியும்... ராஜினாமா என்ற எண்ணத்தோடு, இனிமேல் என்னை சந்திக்க வேண்டாம். நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், நாங்களே கூப்பிடுகிறோம்...’ என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.




இதனால், வேறு எதுவும் செய்ய முடியாமல் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதில் தீவிரமாக இறங்க ஆரம்பித்து விட்டாராம் ப.சிதம்பரம். தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு வான் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று பல்வேறு தரப்பிலும் சொல்லப்பட்டாலும், இந்தியா போன்ற ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகளுக்கு அது சரிபட்டு வராது என்பதுதான் அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்தாம். ‘வான் நடவடிக்கைகளை ஆரம்பித்தால், அப்பாவி பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இந்திய அளவில் இருக்கும் பிரச்னை, உலக அளவிலான பிரச்னையாகி விடும். பிறகு, உலக நாடுகள் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையில் மூக்கை நுழைக்க ஆரம்பித்துவிடும். ஐக்கிய நாடுகள் சபையும் வரும். இலங்கை அனுபவிக்கும் பிரச்னைகளை தொடர்ச்சியாக இந்தியாவும் அனுபவிக்க வேண்டி வரும். இதனால், பொருளாதார பாதிப்புகளும் பெரிய அளவில் ஏற்படும். அதனால்தான் தீவிரவாதிகள் விஷயத்தில் அதிக கவனமும் பொறுமையையும் இந்தியா காக்கிறது...’ என்றும் சொல்கிறாராம் ப.சிதம்பரம். இதற்கிடையில், ‘தீவிரவாதிகள் பந்துக்கு அழைப்பு விடுத்தால், வட மாநிலங்களில் பல மாவட்டங்களில் ஒரு ஈ, காக்காய்கூட குறிப்பிட்ட அந்த தினத்தில் வெளியே வராமல், முழு பந்த் அனுஷ்டிக்கிறார்களாம். ஆக, தீவிரவாதிகளுக்கு மக்கள் செல்வாக்கும் இருக்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது?’ என்றும் கருத்துச் சொல்கிறாராம், ப.சிதம்பரம்.’’
‘‘அவர் தீர்க்கமாவும் நிதானமாகவும்தானே தீவிரவாதிகள் பிரச்னையை எதிர்கொள்வது போலத் தெரிகிறது...’’
‘‘ஆமாம். இதனால்தான், மத்திய அரசு பச்சை ஆபரேஷன் என்ற பெயரில் மக்களுக்கே ஆயுதங்களைக் கொடுத்து, தீவிரவாதிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கேட்டுக் கொண்டது. சில மாநிலங்களில் இதற்கு ஓரளவுக்கு பலன் கிடைத்தாலும், பல மாநிலங்களில் இதற்கு ஆதரவில்லையாம். தீவிரவாதிகள் நடவடிக்கைகளை மக்களே ஆதரிப்பதால், அந்த திட்டம் பெரிய அளவில் எடுபடவில்லையாம். அதனால், முழு வேகத்தில் தீவிரவாதம் வேகமாகப் பரவக்கூடிய கிராமப் புறங்களில் இருக்கும் மக்களை கல்வி&வேலைவாய்ப்பு&பொருளாதாரத்தில் முன்னேற வைக்கும் முயற்சிகளை வேகமாக எடுக்கப் போகிறதாம் மத்திய அரசு. இதைத்தான் ஆந்திராவில் முன்னாள் முதல்வர் டாக்டர் ராஜசேகர ரெட்டி செய்து, பலன் கண்டாராம். அந்த ஃபார்முலாவை அப்படியே நிறைவேற்ற முடிவெடுத்திருக்கிறார்களாம், மத்திய அரசு தரப்பில். இதற்காக, ஆந்திராவில் ஏற்கெனவே தீவிரவாதிகளை ஒடுக்க எடுக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்தெல்லாம் விளக்கமாகக் கேட்டிருக்கிறதாம், மத்திய அரசு...’’
‘‘ஓ, தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசு உறுதியாகத்தான் இருக்கிறதாக்கும்?’’


‘‘பின்னே, மத்திய அரசின் தலையாக கடமையல்லவா அது? சரி போகட்டும்... நாம் மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி எரிச்சல் குறித்துப் பார்ப்போம்...’’ என்றார் மதியார். சிறு இடைவெளிக்குப் பிறகுத் தொடர்ந்தார். ‘‘டெல்லியில் சில நாட்களுக்கு முன்னால் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் இறந்து போனார்களில்லையா? இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து மம்தா பானர்ஜி விலக வேண்டும் என்று கம்யூனிஸ்ட்காரர்கள் சிலர் குரலெழுப்பினார்களாம். இதில் சில காங்கிரஸ்காரர்களின் குரலும் அடங்கி இருந்தாம். ‘ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரெயில்வே துறை நிர்வாகத்தை திறம்பட நடத்தினார். அவர் அமைச்சராக இருந்தபோது, பெரிய அளவில் இந்தமாதிரி அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை...’




என்றெல்லாம் சொன்னார்களாம். இதனால், கடுமையாகக் கோபமடைந்த மம்தா பானர்ஜி, ரெயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது ஏற்பட்ட ரெயில் விபத்துக்கள் தவிர கூட்ட நெரிசலில் மிதிபட்டு பயணிகள் இறந்த சம்பவம் பற்றியெல்லாம் தெளிவாக விவரங்களைத் திரட்டி வைத்துக் கொண்டாராம். பிற்பாடு, இதுகுறித்து பிரதமரிடம் பேசினாராம்.’’
‘‘அச்சச்சோ, ப.சிதம்பரம் போலவே இவரும் பிரதமரிடம் போய்விட்டாரா?’’
‘‘ஆமாம். அவரிடமும் பிரதமர் பொறுமையாக அரசியல் நிலவரங்கள் குறித்தெல்லாம் சொல்லி, ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பினாராம். ரெயில்வே நிர்வாகம் சமீப நாட்களில் வருமான பின்னடைவில் இருக்கும் விவரத்தையும் சொல்லி, அதன் மீதும் கவனம் செலுத்தக் கேட்டுக் கொண்டாராம் பிரதமர்... அதன்பிறகுதான், அமைதியானாராம் மம்தா பானர்ஜி! இதற்கிடையில், தீவிரவாதிகள் பிரச்னையோடு தன்னை முடிச்சிட்டு கம்யூனிஸ்ட்காரர்கள் பேசுவது குறித்தும் ரொம்பவே வருத்தப்பட்டு பிரதமரிடம் பேசினாராம் மம்தா பானர்ஜி!’’
‘‘அதற்கும் சமாதானப்படுத்தினாரா பிரதமர்?’’
‘‘கிட்டத்தட்ட பிரதமரை ஒரு பஞ்சாயத்துத் தலைவர் போல எல்லோரும் டீல் செய்வதை நீரும் கப்பென புரிந்து கொண்டு கமென்ட் அடிக்கிறீராக்கும்?’’ என்றார் மதியார்.
‘‘சரி, தமிழகத்தில் நடக்கும் தொடர் மின்வெட்டைத் தவிர்க்க அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பற்றி ஏதேனும் தெரியுமா?’’ என்று கேள்வி போட, ‘‘வில்லங்கத்தோட கேள்வி கேட்பது புரிகிறது. உம்ம பஞ்சாயத்துக்கு இப்போதைக்கு நான் ஆளில்லையாக்கும்...’’ என்று சிக்காமல் தப்பியோடினார் மதியார்.


Tuesday, May 18, 2010

பத்திரிக்கையாளர்களை உதாசீனப்படுத்தும் குஷ்பூ



“எந்தப் பெண்ணிடம் இல்லாத ஒன்று... அது ஏதோ உன்னிடம் இருக்கிறது. அதை அறியாமல் விட மாட்டேன். அதுவரை உன்னைத் தொடமாட்டேன்...”- என்று தன்னுடைய செல்போன் காலர் டியூனை மாற்றி வைத்திருந்தார் மதியார்.




“என்ன மதியாரே, நீரும் திடீரென்று குஷ்பு ரசிகையாகி விட்டீரா? கேப்டன் மகள் படத்தில் குஷ்பு பாட, பிரபலமான பாடலை திடுமென செல்போன் காலர் டியூனாக மாற்றிவிட்டீரே?” என்றோம்.
“ஊரே, இன்றைக்கு குஷ்பு தி.மு.க-வில் இணைந்த விவகாரத்தைப் பற்றித்தானே பேசிக் கொண்டிருக்கிறது. அதான், குஷ்பு நடித்து வெளிவந்த படத்தில் இருந்து ஒரு பாடலை காலர் டியூனாக்கிக் கொண்டேனாக்கும்... தப்பா?” என்று வெகுளித்தனமாகக் கேட்டார் மதியார்.
“அதிலென்ன தப்பியிருக்கிறது? உமக்குப் பிடித்ததை நீர் காலர் டியூனாக வைத்துக் கொள்கிறீர்! கொஞ்ச காலத்துக்குப் பிறகு வேறொன்றை மாற்றிவிடப் போகிறீர்... சரி, செய்திக்கு வாரும்...”

என்று மதியாரை சேகரித்து வந்திருந்த செய்தி சுரங்கத்துக்குள் இறக்கி விட்டோம்.
“குஷ்பு சம்பந்தமாகவே இத்தனை தூரம் பேசியாச்சு... ஆரம்பமே குஷ்பு சம்பந்தப்பட்ட செய்தியாக இருக்கட்டுமே!” என்ற மதியார், “குஷ்பு, தி.மு.க-வில் இணைந்ததும் வாரப் பத்திரிகைகள் அனைத்தும் தொடர்ந்து பேட்டி, பேட்டி என்று குஷ்புக்கு போன் மேல் போன் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். பத்திரிகையின் பெயரைச் சொன்னதும், ‘நீங்க, எனக்கு எதிரா போராடிய பா.ம.க-வுக்கு ஆதரவா செய்தி போடறவங்களாச்சே... உங்க பத்திரிகை சென்னையிலயே ஒழுங்கா கிடைக்கறதில்லையே... நீங்க, நியாயத்தை எழுத மாட்டீங்களே... உங்களுக்கு செக்ஸ் மேட்டர்கள்தானே, பிரதானம்!’ என்றெல்லாம் வம்படியாகப் பேசி, கலாய்க்கிறாராம். ‘பிறகு, பேசுங்க பார்க்கலாம்...’ என்று சொல்லி, பொறுமையைச் சோதித்துவிட்டு, தொடர்ந்து போன் பேசி ஆர்வமாக இருந்தால் மட்டும், அழைத்துப் பேட்டிக் கொடுக்கிறாராம். இப்படி எரிச்சல் கலந்தி டீஸிங்காக குஷ்பு பேசிய பின்னாலும், வாரப் பத்திரிகைகள் வரிசையாக அவர் வீட்டு வாசலை மிதித்துக் கொண்டிருப்பது, குஷ்பு மீது பத்திரிகையாளர்களுக்கு கடும் எரிச்சலைக் கிளப்பி இருக்கிறதாம்.

அதோடு, கடந்த 16-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிரஸ் மீட் கணக்காக பத்திரிகையாளர்கள் பலரையும் வீட்டுக்கு வரச் சொன்ன குஷ்பு, இருபது இருபது நிமிடங்கள் மட்டும் பத்திரிகைகளுக்கு நேரம் ஒதுக்கி, சொன்னதையே எல்லோரிடமும் தொடர்ந்து சொல்லி அனுப்பினாராம். அதுதான், இந்த வாரத்தின் அனைத்து பிரதான வார இதழ்களிலும் குஷ்பு பேட்டி அசத்தலாக வெளியாகி இருக்கிறதாம்...”
“என்ன செய்வது? கொஞ்ச காலத்துக்கு இப்படித்தால் எல்லா பத்திரிகைகளிலும் குஷ்பு அலங்கரிப்பார்...”


“அது இயற்கைதானே! திருமணத்துக்கு முன்பே ஆணும் பெண்ணும் உறவுக் கொள்வதில் தப்பில்லை என்று புரட்சிகரமான கருத்துக்களை அள்ளிவிட்டதன் மூலம் தமிழகம் முழுவதும் ஒருசேர எதிர்ப்பை சம்பாதித்த நடிகை குஷ்பு, சமீபத்தில் தி.மு.க-வில் இணைத்துக் கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழக ம் முழுக்க போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதையும், சென்னை கண்ணகி சிலை முன்பாக தோப்புகரணம் போட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பது குறித்தும் ஏற்கெனவே சொல்லியிருந்தேனில்லையா? அதனைத் தொடர்ந்து, போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்து மக்கள் கட்சியின் மாநில நிர்வாகியான போரூர் கண்ணனும் வேறு சில நிர்வாகிகளும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார்கள்.”
“அனுமதி கிடைத்துவிட்டதாமா?”


“அதைப் பற்றித்தானே சொல்ல வருகிறேன். ‘குஷ்புவை எதிர்ப்பதாக எங்கும் போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கக் கூடாது என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. அதனால், குஷ்புவுக்கு எதிராக நீங்கள் தமிழகத்தில் எங்கும் போராட்டம் நடத்தக் கூடாது. மீறி நடத்த முயன்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்...’ என்று மிரட்டும் தொனியில் வார்த்தைகளை இறக்கினார்களாம். ‘அப்படியென்றால், குஷ்புவின் கருத்துக்களோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்களா?’ என்று இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கேட்க, ‘உச்ச நீதிமன்றமே குஷ்புவின் கருத்தை ஆதரித்துத் தீர்ப்புச் சொன்னப் பிறகு, குஷ்பு சொன்னக் கருத்து சரிதான். அதனை எதிர்க்க யாருக்கும் உரிமை கிடையாது...’ என்று தீர்க்கமாகச் சொல்லி அனுப்பி விட்டார்களாம்...”


“அப்ப, போராட்டமெல்லாம் அடிப்படையிலேயே புஸ்ஸ் ஆயிடுச்சுன்னு சொல்லும்...”
“அப்படியில்லையாம். குஷ்புவின் கருத்துக்களை எதிர்த்து பிரசார இயக்கம் நடத்த போலீஸிடம் அனுமதி கேட்கப் போகிறார்களாம். அதற்கும் அரசு தரப்பிலிருந்து அனுமதி இல்லை என்றால், ‘தமிழகத்தில் பேச்சு சுதந்தரம் கருத்துச் சுதந்தரத்துக்கு பாதிப்பு...’ என்று சொல்லி கோர்ட்டை நாடப் போகிறார்களாம். இதற்கிடையில், வேறு தலைப்புகளின் கீழ் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துவிட்டு, அதில் முழுக்க முழுக்க குஷ்புவை எதிர்த்து பேசிவிடவும் இந்து அமைப்புகள் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்...”


“மொத்தத்தில், ‘லைலா’ ஸாரி... குஷ்பு புயல் ஓயாதுன்னு சொல்லும்...”
“கொஞ்ச நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்போல. எப்படியோ, மே 17, பிரபாகரன் மாரணமடைந்த நினைவு தினம், பெரிய அளவில் பிரச்னையில்லாமல் தமிழகம் கடந்து விட்டது. அந்த வகையில் குஷ்பு, திடுமென தி.மு.க-வில் இணைந்ததற்கு போலீஸ் தரப்பில் குஷ்புவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்...”
“சரியாக முடிச்சுப் போடுகிறீர்!”


“நான் சொல்வதில் தவறு இருக்கிறதா என்பதை மட்டும் தீர்க்கமாக யோசித்துப் பாரும். உள்ளார்ந்த விஷயங்கள் புரியும்...” என்ற மதியார், “சுவாரஸ்யமான விரால் மீன் சப்ளை குறித்தத் தகவல் வேணுமா?” என்றார்.


“கேட்கவே, நாக்கு ஊறுகிறதே! சரி, செய்தியையாவது, சுவைபட கேட்போம். சொல்லும்...”
“பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருக்கும் ஜி.கே. மணிக்கு, தன்னுடைய ஏரியாவான மேட்டூர் பகுதியில் இருந்து குளத்தில் வளர்க்கப்படும் விரால் மீனை உயிருடன் பிடித்து வந்து, சென்னையில் இருக்கும் முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்குக் கொடுத்து, எல்லா வீடுகளிலும் ஒரே நாளில் மீன் குழம்பும், மீன் வறுவலும் உணவாக இருக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்ததாம்.




இந்த வருடம் மே 14-ம் தேதிதான் அதற்கு சரியான நாளாக வாய்த்ததாம். ஊரிலிருந்து கிலோ கணக்கில் மீன்களை உயிரோடு சென்னைக்குக் கொண்டு வந்து, முதல்வர் வீட்டில் இருந்து ஆரம்பித்து எதிர்கட்சித் தலைவர் வீடு வரைக்கும் மீன் சப்ளை செய்து மகிழ்ந்தாராம் கோ.க. மணி. இதில் அ.தி.மு.க. தரப்பிலும் சில வி.ஐ.பி-க்கள் வீடுகளுக்கு போனதாம் மீன்.”


“பா.ம.க. தரப்பு ஆட்களுக்குப் போனதாமா?”
“அதுபற்றி என்னிடம் விவரங்கள் எதுவுமில்லை...” என்று சொல்லி, கழுவுற மீனில் நழுவுற மீனாக வழுக்கிபடியே அடுத்த செய்திக்குப் போனார் மதியார்.


“கடந்த ஓராண்டுக்கு முன்னால், மே 17-ம் தேதிதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மகன் சார்லஸ் ஆன்டனி ஆகியோர் இறந்துவிட்டார்கள் என்று சொல்லி, இலங்கை ராணுவம் சில உடல்களை வெளியுலகிற்குக் காட்டியது.

அதன் தொடர்ச்சியாக, ‘இலங்கையில் விடுதலைப்புலிகளின் சகாப்தம் முடிந்தது...’ என்று சொல்லி, சூளுரைக்க ஆரம்பித்தார் இலங்கையின் அதிபர் மகிந்தா ராஜபக்ஷே. இருந்தாலும், பிரபாகரன் இறந்து போனது குறித்து இன்றளவிலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் நம்பமுடியவில்லை. அவர்களின் இரண்டு கெட்டான் நிலையை வாகாகப் பயன்படுத்தி இன்றளவிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள், தமிழ் ஆதரவுத் தலைவர்கள் பலரும். இந்த விவகாரம்தான் தற்போது தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருக்கிறது.”
“சரி, என்ன விவகாரம் அது?”


“இந்தாண்டு மே 17-ம் தேதியன்று உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்களெல்லாம் ஒன்று திரண்டு, மே 17-ம் தேதியை உலக போர் நாளாக அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கையை போரில் கொடூரத்தை அரங்கேற்றிய நாடாகவும் அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் போட்டுக் கலைந்திருக்கிறார்கள். கூடவே, தமிழகத்தில் இருக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவு மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் தலைவர்களின் இரட்டை வேடங்கள் குறித்தெல்லாம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்களாம்.




பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் பலரும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல். திருமாவளவன் மீதுதான் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்களாம். ‘இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த மத்திய அரசுக்கு ஆதரவாக நின்ற தமிழக அரசுக்கு இன்றளவிலும் ஆதரவாக நின்று கொண்டு, இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பற்றி உருகி உருகி பேசும் திருமாவளவன் இனிமேல் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்துப் பேச வேண்டாம்...’ என்றும் ‘திருமாவளவனை இந்தப் பிரச்னைகளுக்காக வெளிநாடுகளுக்கு தமிழர்கள் யாரும் அழைக்க வேண்டாம்...’ என்றும் பேசி முடிவெடுத்திருக்கிறார்களாம். இவரைப் போலவே, தமிழகத்துத் தலைவர்கள் பலருக்கும் எதிராக கடுமையான அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதாம்...” “ஓ!”


“திராவிட இயக்கத்து மூத்தத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி மறைந்த தகவல் கேள்விபட்டதும், அவருடைய வீட்டுக்குச் சென்று முதலில் அஞ்சலி செலுத்திவிட்டார் முதல்வர் கருணாநிதி. வழக்கமாக இப்படி முதல்வர் முதலில் சென்று விட்டால், அவர் எத்தனைப் பெரியத் தலைவராக இருந்தாலும், அஞ்சலி செலுத்தப் போகமாட்டார் ஜெயலலிதா. இந்த நடைமுறையை நினைத்து, கே.ஏ.கே., மறைவுக்கு அஞ்சலி செலுத்த ஜெயலலிதா வரமாட்டார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, மதியம் இரண்டரை மணிவாக்கில் தோழி சசிகலா சகிதம் கே.ஏ.கே. வீட்டுக்கு வந்துவிட்டார் ஜெயலலிதா. மாடியில் உடல் வைக்கப்பட்டிருந்ததால், மேலே படியேறி செல்வதைத் தவிர்த்த ஜெயலலிதா, மலர்வளையத்தை தோழி சசிகலாவிடம் கொடுத்து வைக்கச் சொல்லிவிட்டு, கீழேயே இருந்துவிட்டு திரும்பினாராம். கே.ஏ.கே., குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன ஜெயலலிதா, கே.ஏ.கே., கட்சிக்காக உண்மையாக எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பது குறித்த நினைவுகளையெல்லாம் சொல்ல கே.ஏ.கே., குடும்பத்தினர், நெகிழ்ந்து போனார்களாம். இருந்தாலும், வீடு வரை வந்துவிட்டு, கே.ஏ.கே., உடலை பார்க்காமல் ஜெ. திரும்பியது, குடும்பத்தினருக்கு வருத்தம்தானாம்...”

“வீடுவரைக்கும்தான் வந்துவிட்டார்ல...”

“வருகிற 22-ம் தேதி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநாடு சென்னையில் நடக்கவிருக்கிறது. ஒன்றியத்தின் தலைவராக இருக்கும் சூரியமூர்த்திதான், மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்ட முனைப்பாக இருக்கிறார். முதல்வர் கருணாநிதியையும் மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே 2005-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் இப்படித்தான் சென்னை, கோயம்பேட்டில் வைத்து இப்படியொரு மாநாட்டை நடத்தினார் சூரியமூர்த்தி. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும், மாநாட்டுக்கு வருகைதந்து நிறைய பேசினார். நிறைய வாக்குறுதிகளையும் கொடுத்து வந்தார். ஆனால், அவர் அடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வரவில்லை. இந்தத் தகவலைச் சொல்லி, இந்த மாநாட்டுக்கு குந்தகம் விளைவிக்க சிலர் முயன்று கொண்டிருக்கிறார்களாம். அதாவது, ‘இவர் மாநாடு போட்டால், யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர் அடுத்து ஆட்சிக்கு வரமாட்டார்கள்... அப்படியொரு செண்டிமென்ட் இருக்கு’ என்று சூரியமூர்த்திக்கு வேண்டாதவர்கள் கிளப்பிவிட, அது தி.மு.க. தரப்பை அடைந்திருக்கிறதாம். அதனால், இந்த மாநாட்டுக்கு போக விடாமல் எப்படியாவது முதல்வரை தடுத்துவிட வேண்டும் என்று தி.மு.க-வினர் பலரும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்...”
“அடப்பாவமே... இதெல்லாம் சூரிய மூர்த்திக்குத் தெரியுமா?”


“தெரியாமல் இருக்குமா? கடைசி நேரத்தில் சொதப்பாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டி காரியமாற்றிக் கொண்டிருக்கிறாராம். இதற்கிடையில், அலுவலர் ஒன்றியத்தின் பெயரில் மாநாட்டுக்கென்று வசூல் வேட்டை நடக்கிறதாம். சீரியல் எண்கள் கூடப் போடாமல் நன்கொடை வசூலிப்பதற்கென்று ரசீது புத்தகம் அடித்து, தமிழகம் முழுக்க அரசு ஊழியர்களிடம் வசூல் வேட்டை செய்கிறார்களாம். இதெல்லாம் முறையாக ஒன்றியத்துக்குச் செல்கிறதா? அல்லது தனியார் பாக்கெட்டுகளை நிரப்புகிறதா? என்று புலம்புகிறார்களாம் அரசு ஊழியர்கள்.”
“நியாயம்தானே?”



“தமிழக தேர்தல் ஆணையாளராக இருக்கும் நரேஷ் குப்தாவுக்கு தி.மு.க. அரசுக்கு ஆரம்ப காலம் தொட்டே ஏழாம் பொருத்தமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக மேலவை அமைப்பது தொடர்பாக சிறப்பு அதிகாரியாக ஜமாலுதீன் ஐ.ஏ.எஸ்., என்பவரை நியமித்திருக்கிறார்கள். இப்படி மேலவை அமைப்பது தொடர்பான விஷயத்தில் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாமல் எதையும் செய்யக் கூடாதாம். ஆனால், இந்த நியமனம் குறித்து தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தாவுக்கு கடைசி நிமிடம் வரையில் எதுவுமே தெரியாதாம். மனிதர் கொதித்துப் போய் தமிழக அரசுக்கு படுகாட்டமாகக் கடிதம் அனுப்பி விட்டாராம். இதுதான் தலைமைச் செயலகத்தில் இப்போது ஹாட் விவாதப் பொருள்...”
“தமிழக அரசு என்ன செய்யும்?”


“என்ன செய்வார்கள்? ஏதாவது ஒரு பதிலை எழுதி அனுப்பி விடுவார்கள். நரேஷ்குப்தாவும் வேறு எதுவும் செய்ய முடியாமல், அமைதியாகி விடுவார். இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், வரும் ஜூலை மாதத்தோடு நரேஷ்குப்தா ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்தபடியாக தங்களுக்கு இணக்கமானவரை தேர்தல் ஆணையராகக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு தரப்பில், சீனியர் அந்தஸ்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். யாருமே சிக்க மாட்டேங்கிறாங்களாம்.”
“யாரும் கிடைக்காமலா போய்விடுவார்கள்?”



“ ‘தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பெரும் மாறுதலுக்கு பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது’ என்று சொல்லியிருந்தேனில்லையா? அதுபடியே, மாறுதல் வந்துவிட்டது. தலைமைச் செயலாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட, மாலதி ஐ.ஏ.எஸ்-ஸை விஜிலென்ஸ் கமிஷனராக நியமித்து விட்டார்கள். நிதித் துறைச் செயலாளராக இருந்த ஞான தேசிகனை உள்துறைச் செயலாளராக்கி விட்டார்கள். ஞானதேசிகனுக்கும் மாலதிக்கும் நடந்த கடுமையான பனிப்போரில் ஞானதேசிகன் வென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கோட்டையில் இருந்தபடி ஞானதேசிகனுக்காக பனியாற்றிக் கொண்டிருந்த லாபி இறுதியில் வெற்றியடைந்திருக்கிறது.

பவர்புல்லாக இருந்த மாலதியை அங்கிந்து தூக்கிவிட்டு, அந்த இடத்துக்கு தான் வந்து உட்கார்ந்து விட்டார் என்றால், சும்மாவா? இதற்கிடையில், மாலதிக்கு விஜிலென்ஸ் கமிஷனர் பதவி கொடுத்திருக்கும் விவரம் அறிந்து, கோட்டையில் இருக்கும் பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நடுங்கிப் போயிருக்கிறார்களாம். கடுமையாக நடந்து கொள்ளும் போக்கு கொண்ட மாலதி, தொட்டதுக்கும் விஜிலென்ஸ் என்கொயரிக்கு உத்தரவிட்டுவிட்டால் என்ன செய்வது? என்பதுதான் அவர்களுடைய நடுக்கத்துக்குக் காரணமாம்...”
“அரசாங்க உத்தியாகம்னாலே இப்படித்தான், கண்டதுக்கும் பயப்பட வேண்டும் போல...” என்று நாம் சொல்ல, “நம்ம வேலை மட்டும் என்னவாம்?” என்று கமென்ட் விட்டபடியே, புறப்பட்டார் மதியார்.