
‘‘இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது/தெரிவிப்பது என்னவென்றால், டிசம்பர் ஃபீவர் ஸ்டார்ட் ஆயிடுச்சு. எல்லோருக்கும் வேலைப் பளு அதிகரிக்கும். அதுக்கு தயாரா இருங்க...’’ என்று கிராமங்களில் தண்டோரா போட்டு செய்தியை தெரிவிக்கும் நபர் போல, சட்டமன்ற தேர்தல் டிசம்பரில் கட்டாயம் வருது என்ற தகவலைச் சொன்னார் மதியார்.
‘‘சரி, அதனை நேரடியாகச் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே? எதற்கு இந்த தண்டோரோ அறிவிப்பெல்லாம்?’’ என்றோம் நாம்.
‘‘தண்டோரோவோ, முரசோ... எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இப்பவே டிசம்பர் ஃபீவர் ஆரம்பமாயிடுச்சு தெரியுமாக்கும்? சிறுதாவூர் பங்களாவில் வைத்து மூன்று மாத காலத்துக்கு கட்சியின் அனைத்து மாவட்ட ஆட்களையும் வரிசையாக வரச் சொல்லி, பார்த்து, பேசி, உற்சாகப்படுத்தி அனுப்பினால் அவர்கள் நேரடியாக களத்துக்குச் சென்று தேர்தல் வேலைப் பார்ப்பார்கள் என்று பக்காவாக பிளான் போட்டு, அதற்காக சிறுதாவூர் பங்களாவில் சிறப்பான ஏற்பாடுகளையெல்லாம் ஜெயலலிதா செய்து கொண்டிருந்தாரில்லையா?’’ நிறுத்தினார் மதியார்.
‘‘அதில் ஏதும் மாற்றம் இருக்கிறதா என்ன?’’
‘‘நன்றாகக் கேட்டீர். மாற்றம் தானே செய்தியே! சிறுதாவூர் பங்களாவை நேர்காணலுக்காக ஜெயலலிதா தயார்படுத்திக் கொண்டிருக்க, ஆளும்கட்சித் தரப்பில் தங்களை டிசம்பர் தேர்தலுக்குத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் பார்த்து நேர்காணல், அது... இது... என்று ஜெயலலிதா மட்டும் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்க முடியுமா என்ன? அதனால், நேர்காணல் திட்டத்தை கைவிடும் யோசனைக்கு வந்துவிட்டாராம். நேர்காணலெல்லாம் தேர்தலுக்குப் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம். இருந்தாலும், பத்து நாளைக்கு மட்டும் வரிசையாக எல்லா மாவட்டத்துக் கட்சிக்காரர்களையும் வரவழைத்து, சிம்பிளாக நேர்காணலை நடத்தி முடித்துவிடப் போகிறாராம்...’’
‘‘ஓ... கடைசில இப்படி ஆகிப் போயிடுச்சா?’’
‘‘சரி, ஜெயலலிதா நேர்காணல் நடத்தவிருந்தது இப்படி மாறிப்போகப் போகுதுன்னா, வர்ற 22&ம் தேதியன்னைக்கு அவசரமா சென்னையில 234 தொகுதிகளுக்கும் கட்சி சார்பா போடப்பட்டிருக்கும் பொறுப்பாளர்களையும் வரவழைச்சு மீட்டங் நடத்தப் போறாரு விஜயகாந்த் அது தெரியுமா?’’ என்றார்.
‘‘சொன்னால் தெரிந்து கொள்வேனாக்கும்...’’

‘‘சொல்கிறேன். விஜயகாந்தும் தேர்தலுக்குத் தயாராக வேண்டாமா? அதற்கான முன்னேற்பாடாகத்தான் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம். தொகுதி பற்றிய அத்தனை புள்ளிவிவரங்களோடும் சென்னைக்கு வண்டி ஏற வேண்டும் என்று தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு கட்சியின் தலைமையிலிருந்து உத்தரவிட்டிருக்கிறார்களாம். எந்தத் தொகுதி பொறுப்பாளரையும் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி, எந்தக் கேள்வியும் கேட்பாராம் விஜயகாந்த். தெளிவாகச் சொல்ல வேண்டுமாம்... இல்லையென்றால்?’’
‘‘இல்லையென்றால்... என்ன ஆகும்?’’
‘‘டென்ஷனாகும். என்ன வேண்டுமானாலும் நடக்குமாம். மொத்தத்தில் பள்ளிக்கூட வாத்தியார் மாதிரி விஜயகாந்தும் பள்ளி மாணவர்களாக பொறுப்பாளர்களாகவும் இருக்க, கூட்டம் நடத்தப்படும் போல. விஜயகாந்த் வைக்கும் தொகுதிப் பரீட்சையில் எத்தனை பொறுப்பாளர்கள் தேறுவார்கள்? எத்தனை பொறுப்பாளர்கள் ஃபெயில் ஆவார்கள் என்றுதான் தெரியவில்லை. ஆனால், வீடு திரும்புவதற்குள் அ.தி.மு.க. பாணியில் சில பொறுப்பாளர்கள் பதவி பறிக்கப்பட்டாலும் படலாமாம். அந்தளவுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் சீரியஸாக இருக்கப் போவதாகத்தான் கட்சிக்காரர்களிடம் சொல்லியிருக்கிறாராம் விஜயகாந்த். ‘கேப்டன் ரொம்ப சீரியஸா இருக்காங்க. அதுனால, தொகுதி பத்தில் ஒண்ணுவிடாம விவரங்க¬ளைத் திரட்டி வந்துடுங்க’னு தலைமையிலிருந்து சொன்னத் தகவலை வெச்சு, பயந்தபடியே அங்கும் இங்கும் ஓடி விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்களாம், கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர்கள்...’’
‘‘பொறுப்புக்குன்னு வந்துட்டா எத்தனை சிரமம் பாரும்..?’’
‘‘இதுக்குத்தானே இத்தனை அடிதடியா கெடக்குது? காசு பணமெல்லாம் கொடுத்துக்கூட பதவி வேணும்னு அலையறாங்களே? என்ன செய்ய..? பதவி பொறுப்புன்னு வந்தபிறகு இதெல்லாம் அனுபவிச்சுத்தான் ஆகணும். புரிஞ்சுதா’’ என்ற மதியார், ‘‘காலாவதி மருந்து, போலி மருந்துன்னெல்லாம் பெரிய விவகாரம் ஒண்ணு பூதாகரமா கிளம்பி மீனாட்சி சுந்தரம், சஞ்சீவ் சர்மான்னு பலபேரை வளைச்சு வளைச்சு பிடிச்சாங்க போலீஸ் அதிகாரிங்க. சென்னை ராயபுரம் ஏரியாவில் இந்த காலாவதி மருந்துப் பொருட்களை வைத்துக் கொள்வதற்காக குடோனை வாடகைக்கு விட்டவர்களையெல்லாம்கூட விடாமல் விரட்டி விரட்டிப் பிடித்தது சி.பி.சி.ஐ.டி., போலீஸ். ஆனால், இந்த விவகாரத்தின் ஆழ&அகலம் ரொம்பப் பெரிதாகச் சென்று கொண்டிருக்கிறதாம். என்ன காரணமோ தெரியலையாம்... இந்த வழக்கில் ரொம்ப வேகமாகச் சென்ற சி.பி.சி.ஐ.டி., போலீஸார் திடீரென்று பிரேக் அடித்து, நின்று விட்டார்களாம். இருக்கும் தகவல்களை மட்டும் வைத்து வழக்கை நடத்தி, சிக்கியவர்களுக்கு மட்டும் தண்டனை வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்து விட்டார்களாம்...’’
‘‘என்னது, வழக்கு விசாரணையை தொடராமல் விட்டு விட்டார்களா? தீர விசாரித்தீரா?’’
‘‘எதையும் விசாரிக்காமலா சொல்வேன். சமீபகாலமாக சி.பி.சி.ஐ.டி., போலீஸார் மீது சொல்லப்படும், புகார்தான் இந்த விஷயத்திலும் சொல்லப்படுகிறதாம். காலாவதிகளும் போலிகளுமாகச் சேர்ந்து சி.பி.சி.ஐ.டி., போலீஸ் படைக்குள்ளேயே இருக்கும் போலிகளையும் காலாவதிகளையும் தேர்ந்தெடுத்து, படம் காட்ட பெட்டிப் பாம்பாக அவர்கள் அடங்கிப் போய்விட்டார்களாம். அவர்கள் தந்திரமாக உயர் அதிகாரிகளை திசைத்திருப்பி, ‘அவ்வளவுதான் சார் இந்த விவகாரம். தொடர்ந்து என்ன விசாரிச்சாலும், இதே தகவல்கள்தான் கிடைக்கும்...’ என்று தந்திரமாகச் சொல்ல, எந்திரமாகத் தலையாட்டி விட்டார்களாம் அதிகாரிகள்...’’
‘‘அடப்பாவமே! மனித உயிரோடு விளையாடும் மருந்துப் பொருட்களில் நடக்கும் முறைகேடுகளில்கூடவா இப்படியெல்லாம், உள்விளையாட்டு விளையாடுகிறார்கள்?’’
‘‘உம்ம கவலை உமக்கு. அவர்கள் கவலை அவர்களுக்கு! மனித உயிரெல்லாம் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், இந்தத் தவறுகளுக்கே வழியில்லையே... ஆகமாட்டாத விஷயத்தையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீரே...’’ என்று நம் கமென்ட்டுக்கு எரிச்சல் கமென்ட் போட்ட மதியார், விவகாரத்தை விவரமாக அடுக்க ஆரம்பித்தார்.
‘‘சஞ்சீவ் குமார், மீனாட்சி சுந்தரத்தையெல்லாம் பிடித்து விளக்கமாக விசாரித்தபோது அவர்கள் தங்களுக்கும் ஆந்திராவில் இருக்கும் ஒரு மருந்து கம்பெனி கும்பலுக்கும் உள்ளத் தொடர்புகளையெல்லாம் சொன்னார்களாம். அதனடிப்படையில்தான் சி.பி.சி.ஐ.டி., போலீஸார் ஆந்திராவின் ஹைதராபாத்துக்குச் சென்று தீவிரமாக விசாரித்தார்களாம். ஹைதராபாத்துக்கு அருகில் ஜீடிமெட்லா என்ற ஏரியாவில் போலியாக மருந்து தயாரிக்கும் கம்பெனி ஒன்றையே நடத்தி வந்தார்களாம். தயாரிக்கப்படும் மருந்துகள் குறிப்பிட்ட காம்பினேஷனில்தான் தயாரிக்கப்படுகிறது என்று சான்றளிப்பதற்காக போலியாக மருந்து சோதனைக் கூடம் ஒன்றைக்கூட ஏற்பாடு செய்து வைத்திருந்ததெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டதாம். இங்கிருந்து போலியாக தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்களெல்லாம் இந்தியா முழுவதும் விற்பனைக்குச் சென்றிருக்கிறதாம். அப்படி இங்கிருந்து அனுப்பப்பட்ட எல்லா மருந்துப் பொருட்களும் சென்னை வந்து அங்கிருந்துதான் அனுப்பப்பட்டிருக்கிறதாம். இதெல்லாத்தையும் கண்டுபிடித்துவிட்ட சி.பி.சி.ஐ.டி., போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தார்களாம். சிலரை வளைக்க முயல, கடந்த 15&ம் தேதியன்று இந்த சோதனைக் கூடம் திடுமென தீப்பிடித்து எரிந்து விட்டதாம்.
அங்கு பணியில் இருந்த 7 பேர் காயம்கூட அடைந்திருக்கிறார்கள். தீப்பிடித்து எரிந்த சம்பவம், ஒரு விபத்து போல காட்டப்பட்டாலும், அதனுள்ளே பல விவகாரம் ஒளிந்திருக்கிறது என்பதுதான், நடப்பதையெல்லாம் கூர்ந்து நோக்கும் நேர்மையான சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகளின் புலம்பலான பேச்சு! இருந்தாலும், ஆந்திராவில் இருந்து நரசிம்மராவ், வெங்கட்ரெட்டி என்ற இருவரை போலீஸார் கைது செய்து போலி மருந்து தொழிற்சாலை நடத்தியது தொடர்பாக கைது செய்திருக்கிறார்களாம். இருந்தும் பூபதி ராஜூ, சுப்புராஜூ ஆகிய இருவரும்தான் இத்தனை பூதாகர நிகழ்வுகளுக்கும் பூதங்களாக இருந்து செயல்பட்டவர்களாம். அவர்களை வளைக்காமல் சி.பி.சி.ஐ.டி., பம்முவதன் பின்னணி குறித்துத்தான் பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்கிறதாம்...’’
‘‘இருக்காதா பின்னே?’’
‘‘பெரிய நெட்வொர்க் பின்னணியாக இருந்து செயல்பட்டுள்ள குற்றங்கள் இது. மாநிலங்களைக் கடந்தும் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்த வழக்கை இந்த நிலையிலாவது சி.பி.ஐ., போலீஸாரிடம் கொடுத்துவிடலாம் என்பதுதான் சி.பி.சி.ஐ.டி., போலீஸிலேயே இருக்கும் ஒரு சில அதிகாரிகளின் கருத்து!’’
‘‘அந்த கருத்தெல்லாம் ஏழைச் சொல்லாக இருந்தால் அம்பலத்துக்கு வராதுதானே?’’
‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது... இப்போதைக்கு என்னுடைய இலக்கு அடுத்தச் செய்தியைச் சொல்வதுதான்...’’ என்ற மதியார், ‘‘சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக இருக்கும் பலருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பாக டிரான்ஸ்பர் போட்டார்களில்லையா, அதில் ரொம்பவும் வருத்தத்தில் இருப்பவர் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராகவும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் இணக்கமான அதிகாரியாகவும் இருக்கும் அசோக் வரதன் ஷெட்டிதானாம். போடப்பட்டிருக்கும் டிரான்ஸ்பரில் ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குநராக இருந்த ககன் சிங் பேடிக்கும் மகளிர் மேம்பாட்டுத் துறையின் நிர்வாக இயக்குநராகவும் உதயச்சந்திரன் ஆகிய இருவருக்கும்கூட மாறுதல் போடப்பட்டிருக்கிறது.
இந்த இருவருமே அசோக் வரதன் ஷெட்டிக்கு கீழே பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள்தானாம். மாறுதல் வரும் வரையில் ஷெட்டிக்கு இந்த விவரம் எதுவுமே தெரியாதாம். அதனால், தலைமைச் செயலாளராக இருக்கும் ஸ்ரீபதி மீதுதான் கடுமையான அதிருப்தியில்
இருக்கிறாராம் ஷெட்டி...’’
‘‘அதிருப்தியோடு இருந்து மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? போட்ட டிரான்ஸ்பரை திரும்பப் பெற்றுக் கொண்டுவிடப் போகிறார்களாக்கும்?’’
‘‘அடக்கம் ப்ளீஸ்...’’ என்ற மதியார், ‘‘அதென்னவோ தெரியவில்லை... கரூர் தொகுதியின் முன்னாள் எம்.பி&யான தி.மு.க. பிரமுகர் கே.சி. பழனிச்சாமியை உண்டு, இல்லை என்று ஆக்கிவிட முடிவெடுத்து விட்டாராம் ஜெயலலிதா. ஏற்கெனவே கொள்ளை கொள்ளையாக தி.மு.க&வினர் ஆற்று மணலைத் திருடி சம்பாதிக்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லி, அ.தி.மு.க. சார்பில் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தி விட்டார் ஜெயலலிதா. அதன்பிறகும், அவர் அதனை விடுவதாக இல்லையாம். புதிதாகக் கிடைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமானதாக இருப்பதாகச் சொல்லி, இன்னொரு போராட்டத்தை அறிவிக்கப் போகிறாராம். அந்தப் போராட்டம் முழுக்க முழுக்க கே.சி.பழனிச்சாமியை மையப்படுத்தியே இருக்கப் போகிறதாம். விசாரித்தால், நமக்கேக் கூட கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.’’
‘‘அப்படியென்ன அதிர்ச்சி...’’
‘‘அ.தி.மு.க&வினர் சொன்னத் தகவல்களை மட்டும் விவரமாகச் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளும்... மதுக்கான் ப்ராஜெக்ட் லிமிடெட் என்ற ஒரு நிறுவனம் கிராவல் மண் எடுக்க டென்டர் எடுத்திருந்ததாம். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட இடத்தைத் தாண்டியும் மண் எடுத்து பணம் பார்ப்பதாக கனிம வளத் துறையினருக்குத் தொடர்ந்து வந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த 01.07.2009 அன்று ரெய்டு நடத்தினார்களாம். அப்போது 1062 லோடு கிராவல் மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டிருப்பது தெரிந்து, இரண்டு லட்ச ரூபாய் தண்டத் தீர்வை விதித்தார்களாம் அதிகாரிகள். அதோடு, அந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலிலும் வைத்தார்களாம். இத்தனை பின்புலங்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக இருந்தும் அதனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், அந்த நிறுவனத்துக்கு மீண்டும் கிராவல் மண் அள்ளுவதற்கு அரசு தரப்பிலிருந்து 19.02.2010 தேதியிட்டு அனுமதி கொடுத்திருக்கிறார்களாம். காரணம், கே.சி.பழனிச்சாமி என்பதுதான் அ.தி.மு.க. தரப்பின் குற்றச்சாட்டு. இப்படி பல கம்பெனிகளை போலியாக உருவாக்கி வைத்துக் கொண்டு கோடி கோடியாக மணல் அள்ளிக் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லத்தான் போராட்டம் நடத்தப் போகிறாராம் ஜெயலலிதா!’’
‘‘ஓ... இதற்குப் பின்னால் இத்தனை விவரங்கள் இருக்கிறதாக்கும்?’’
‘‘இன்னும் இன்னும் இருக்காம். அதெல்லாம் போராட்டத்தின் போது வரிசையாக வெளிவருமாம்...’’ என்ற மதியார், ‘‘தமிழக அரசு மின்வெட்டைத் தடுக்க ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறதா? என்று நேற்று ஒரு சிக்கலான கேள்வியைப் போட்டீரல்லவா? அது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தேன். பெரிய அளவில் திட்டம் எதுவும் இல்லை என்பதுதான் அவர்களுடைய பதில். இது அரசு தரப்புக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரியுமாம். அதனால்தான், இந்தப் பிரச்னை அடுத்த மே மாதம் கோடையில் பூதாகரமாக வெடித்து, அரசுக்கு எதிரான பெரிய பிரச்னையாகத் திரும்பி, அது தேர்தலில் எதிரொலித்துவிடக் கூடாது என்பதில் தி.மு.க. தரப்பு கவனமாக சில ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறதாம்...’’
‘‘என்ன ஏற்பாடு, கர்நாடகத்திலிருந்து கரண்ட் வாங்கப் போகிறார்களா?’’
‘‘அப்படியெல்லாம் இல்லையாம். மக்கள் மழை&குளிர் காலத்தில் கரண்ட் கட் பிரச்னையில்லாமல் மறந்திருக்கும் சமயமான டிசம்பர் மாதத்திலேயே தேர்தலை நடத்தி முடித்துவிடலாம் என்பதுதான் திட்டமாம். பிறகு, ஆட்சிக்கு வந்த பின்னால், மக்கள் மே மாதத்தில் திண்டாடி, திட்டித் தீர்த்து ஆகப் போவதென்ன? ஸ்டேடஸ்கோ மெயின்டென் ஆகப் போகிறது அவ்வளவுதானே?’’ என்ற மதியார், ‘‘கரண்ட் கட் வரையில் செய்தி சொல்லியாச்சு. இத்தோடு இன்றைய நியுஸுக்கு கட்!’’ என்று சொல்லிவிட்டு மின்சாரமாய் மறைந்தார்.

No comments:
Post a Comment